தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், ஊராட்சி செயலர் தாமதமாக வந்ததாகக் கூறி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டம் நடைபெறும் இடத்தில் திரண்டிருந்தனர்.
இந்நிலையில், கூட்டத்தை நடத்த வேண்டிய ஊராட்சி செயலர் உரிய நேரத்தில் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அங்கு இருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கிராமசபை கூட்டம் தொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றும், கூட்டத்தில் பங்கேற்க போதுமான அளவில் பொதுமக்கள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். அரசுத்துறை அதிகாரிகள் மட்டுமே அதிகளவில் இருந்த நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களை வைத்து கிராமசபை கூட்டத்தை நடத்த முயற்சிப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், கூட்டம் நடைபெறாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தா.பழூர் ஊராட்சி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

