ராஜபாளையம்: அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் அதிகாரிகள் மிகவும் பணிவுடனும் கனிவுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், ஊழலற்ற வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், "கடந்த ஆட்சியில் நடந்துகொண்டதைப் போல தற்போதும் நடந்துகொள்ளலாம் என அதிகாரிகள் தயவுசெய்து நினைக்க வேண்டாம். ஊழலற்ற ஆட்சியைத் தருவதே எங்களது முதன்மை நோக்கமாகும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதற்கு முன்பாக நீங்கள் எவ்வாறு பணியாற்றினீர்கள் என்பது குறித்து நாங்கள் கேள்வி கேட்கப் போவதில்லை. நமக்குத் தேவையெல்லாம் மக்களுக்கான சிறந்த ஆட்சிதான். பத்திரிகையாளராக இருந்து மக்கள் சேவையைத் தொடர்ந்து செய்துவரும் நான், ராஜபாளையம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிகாரிகளாகிய நீங்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முதலமைச்சர் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் முறையாகச் செயல்படுத்தினால் மட்டுமே அத்திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடையும்" எனக் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் அணுகுமுறை குறித்துப் பேசிய அமைச்சர், "நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் மத்தியில், அரசு மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நமது செயல்பாடு அமைய வேண்டும். பொதுமக்கள் புரிதல் இல்லாமல் பேசினால் கூட, அவர்களிடம் கோபப்படாமல், குரலை உயர்த்தாமல் பொறுமையாக எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டும். ஊழல் குறித்த சிறு சிந்தனை கூட யாருக்கும் வரக்கூடாது" என்று வலியுறுத்தினார்.
மேலும், "அதிகாரிகளுக்கு யாராவது தவறான அழுத்தம் கொடுத்தால் அதற்கு ஒருபோதும் அடிபணிந்துவிடாதீர்கள். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை; நிர்வாகம் எப்போதும் வெளிப்படைத்தன்மையோடுதான் இருக்கும். உங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால் என்னை அமைச்சராகப் பார்க்காமல், உங்கள் வீட்டுச் சகோதரியாகப் பாவித்து வெளிப்படையாகத் தெரிவிக்கலாம்" என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

