கரூர் மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் பல்வேறு அரசு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து காலை முதல் மாலை வரை தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
சட்டமன்ற உறுதிமொழிக் குழுத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்கு உட்பட்ட தோரணக்கல்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நவீன ஆவின் பால் பண்ணை பார்வையிடப்பட்டது.
இந்த ஆய்வின்போது, பால் கொள்முதல் செய்யும் முறை, அதனைப் பதப்படுத்தும் விதம் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கும் முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழுத் தலைவர் விஜய் சரவணன், மாவட்டத்தில் அரசுத் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், கள ஆய்வின்போது அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் மூலமாகச் பரிசீலிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்தப் பால் பண்ணையில் நாள்தோறும் 50,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகவும், உள்ளூர் தேவைகள் போக மீதமுள்ள பால் சென்னை பெருநகருக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்வு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், இது சம்மந்தப்பட்ட துறை அமைச்சரும் மாண்புமிகு முதலமைச்சரும் ஆலோசித்து எடுக்கக் கூடிய முடிவு என்றார். பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, பால் பொருட்களின் விலையும் அதற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விமர்சனங்கள் எழும் போது துறை அமைச்சர் மூலம் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

