கரூர் மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய 4 மணி நேர அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.24,000 ரொக்கம் மற்றும் ரூ.80,000 மதிப்பிலான வங்கி பணப்பரிவர்த்தனை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஜான் தலைமையில், இரு வாகனங்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாலை 4:30 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இரவு 8:30 மணி வரை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த தீவிர சோதனையின் முடிவில், கணக்கில் வராத மற்றும் சந்தேகத்திற்கு இடமான வகையில் வைக்கப்பட்டிருந்த ரூ.24,000 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.80,000 தொகையிலான வங்கி பணப்பரிவர்த்தனை தொடர்பான விவரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

