Settings

முகப்பு/செய்திகள்/அப்துல் கலாம் பிறந்தநாள்: திருப்பத்தூர் பள்ளி மாணவர்களின் அசத்தல் அறிவியல் கண்டுபிடிப்புகள்!
செய்திகள்

அப்துல் கலாம் பிறந்தநாள்: திருப்பத்தூர் பள்ளி மாணவர்களின் அசத்தல் அறிவியல் கண்டுபிடிப்புகள்!

🕒 27 அக்., 2026, 02:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அப்துல் கலாம் பிறந்தநாள்: திருப்பத்தூர் பள்ளி மாணவர்களின் அசத்தல் அறிவியல் கண்டுபிடிப்புகள்!
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் ராமகிருஷ்ணா பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர் எழுச்சி நாளையொட்டி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இ கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் என்.திருப்தி ஆகியோர் கூட்டாகத் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

இந்தக் கண்காட்சியில், மாணவர்கள் தங்களது அறிவியல் திறன்களையும் புதுமையான கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட நவீன சாதனங்கள், பயணத்தின்போது தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், கதவுகளில் குழந்தைகளின் கைகள் சிக்காமல் தடுக்கும் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களின் தரத்தைக் கண்டறியும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

மேலும், அன்றாட வாழ்க்கையில் பயன்படும் வகையிலான தானியங்கி இயந்திரங்கள், உணவை வீணாக்காமல் தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ள உதவும் அமைப்புகள், சாலைகளில் விபத்துகளைத் தடுக்கும் தொழில்நுட்பங்கள், மழை பெய்யும்போது தானாக இயங்கும் மழை உணரிகள் மற்றும் துணிகளை மழையில் நனையாமல் பாதுகாக்கும் தானியங்கி உலர்த்தும் அமைப்புகள் போன்ற பல்வேறு படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. பொதுமக்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் குறைந்த செலவில் பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கண்காட்சியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு மாணவரின் அறிவியல் படைப்புகளையும் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 40 பள்ளிகளில் இருந்து 74 மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளுடன் இக்கண்காட்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔