Settings

முகப்பு/செய்திகள்/மதுரையில் மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு: விளையாட்டின்போது நேர்ந்த விபரீதம் – 10 வயது சிறுவனின் தாய் கைது!
செய்திகள்

மதுரையில் மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு: விளையாட்டின்போது நேர்ந்த விபரீதம் – 10 வயது சிறுவனின் தாய் கைது!

🕒 27 அக்., 2026, 09:47 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
மதுரையில் மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு: விளையாட்டின்போது நேர்ந்த விபரீதம் – 10 வயது சிறுவனின் தாய் கைது!
✨

AI Highlights

  • •மதுரை மேலூர் அருகே விளையாட்டின்போது சிறுவன் உயிரிழந்த வழக்கில் தடயங்களை அழிக்க முயன்ற தாய் கைது. போலீசார் தீவிர விசாரணை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கீழவளவு காவல் நிலைய எல்லையில் உள்ள தனியாமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்தியா தம்பதியினரின் மகன் முத்துவேல் (7). இவர் அக்டோபர் 25ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள அடைக்கலம் காத்த அம்மன் கோயில் அருகே விளையாடச் சென்றுள்ளார்.

ஆனால், மாலை 4 மணி வரை சிறுவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். சிறுவனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவரது தாய் சத்தியா கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனைத் தேடும் பணியைத் தொடங்கினர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அவரது உத்தரவின்பேரில் 90 போலீசாரைக் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இரவு முழுவதும் தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.

பாழடைந்த வீட்டில் சிறுவன் சடலமாக மீட்பு

தொடர்ந்து அக்டோபர் 26ஆம் தேதி காலை சுமார் 10.45 மணியளவில், தனியாமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவருக்குச் சொந்தமான ஆளில்லாத பாழடைந்த வீட்டில் சிறுவன் முத்துவேல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விளையாட்டின்போது நடந்தது என்ன?

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அக்டோபர் 25ஆம் தேதி காலை முத்துவேலும் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

அப்போது விளையாட்டுத்தனமாக 10 வயது சிறுவன், முத்துவேலின் கழுத்தைக் கயிற்றால் இறுக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முத்துவேல் ஓடியபோது கோயில் சுவரில் மோதி அவரது முன்பற்கள் சேதமடைந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் முத்துவேல், அந்த 10 வயது சிறுவனின் வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது சிறுவனின் தாய் சந்தியா முன்னிலையில் முத்துவேல் மயங்கி விழுந்ததாக காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை மறைக்க முயற்சி – தாய் கைது

முத்துவேல் உயிரிழந்ததை அறிந்த சந்தியா, தனது மகனின் செயலை மறைப்பதற்காகவும் சம்பவம் தொடர்பான தடயங்களை அழிப்பதற்காகவும் சிறுவனின் உடலை ராஜாங்கத்திற்குச் சொந்தமான பாழடைந்த வீட்டில் மறைத்து வைத்ததாக போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து, சட்டத்திற்கு முரண்பட்ட செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 10 வயது சிறுவனை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தின் முன்பு ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான தடயங்களை அழிக்க முயன்றதாக சிறுவனின் தாய் சந்தியாவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை அக்டோபர் 27ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔