விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் துணை மின் நிலைய வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள புல்வெளியில் பற்றிய தீ, காற்றின் வேகத்தில் மளமளவென பரவியது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மின்மாற்றி எண்ணெய் கேன்களிலும் தீப்பற்றியது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் மின்மாற்றி எண்ணெய் கேன்களில் பற்றி எரிந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனால் அங்கு இருந்த மின்மாற்றிகளுக்கு தீ பரவி, மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

