Settings

முகப்பு/செய்திகள்/பரமத்தி வேலூரில் சிமெண்ட் பைப் நிறுவனத்தில் துணிகரக் கொள்ளை காவலாளியைக் கட்டிப்போட்டு கத்தி முனையில் மிரட்டல் – லாரி, மினி ஆட்டோ உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை
செய்திகள்

பரமத்தி வேலூரில் சிமெண்ட் பைப் நிறுவனத்தில் துணிகரக் கொள்ளை காவலாளியைக் கட்டிப்போட்டு கத்தி முனையில் மிரட்டல் – லாரி, மினி ஆட்டோ உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை

🕒 24 அக்., 2026, 03:46 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
பரமத்தி வேலூரில் சிமெண்ட் பைப் நிறுவனத்தில் துணிகரக் கொள்ளை
 காவலாளியைக் கட்டிப்போட்டு கத்தி முனையில் மிரட்டல் – லாரி, மினி ஆட்டோ உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் சிமெண்ட் பைப் தயாரிக்கும் நிறுவனத்திற்குள் முகமூடி அணிந்து புகுந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல், காவலாளியைக் கட்டிப்போட்டு கத்தி முனையில் மிரட்டி, லாரி, மினி ஆட்டோ உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தொடர்பு இருப்பதாக நிறுவன உரிமையாளர் புகார் அளித்துள்ள நிலையில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பொத்தனூர் சாலையில், வரதராஜன் (56), அவரது மனைவி ஜெயசுதா (50) ஆகியோர் ராஜ் பைப் கம்பெனி என்ற பெயரில் சிமெண்ட் பைப் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு நிறுவன உரிமையாளர் வரதராஜன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில், முகமூடி அணிந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி பிரகாஷை கத்தியைக் காட்டி மிரட்டிய அந்தக் கும்பல், அவரது செல்போன்களைப் பறித்ததுடன், கை மற்றும் வாயைக் கட்டிப்போட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களையும் உடைத்துள்ளனர். தொடர்ந்து, நிறுவனத்தில் இருந்த லாரி, மினி ஆட்டோ, வாகனங்களின் அசல் ஆர்.சி. புத்தகம், காசோலைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த பீரோக்கள் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலையில் நிறுவனத்திற்கு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, காவலாளி பிரகாஷ் கை மற்றும் வாயைக் கட்டிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நிறுவன உரிமையாளர் வரதராஜனுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நிறுவனத்திற்கு வந்த வரதராஜன், அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காவல்துறையின் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, காவலாளி பிரகாஷிடம் விசாரித்தபோது, இடத்தின் உரிமையாளர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான உதயசூரியன் மற்றும் அவரது மகன் சிதம்பரம் ஆகியோர் கூலிப்படையை ஏவி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் இருவருக்கும் ஏற்கனவே கம்பனிஇடம் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் வரதராஜன் தெரிவித்துள்ளார் . இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வரதராஜன் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாகப் பரமத்தி வேலூர் காவல்துறை அதிகாரி வெண்ணிலா விசாரணை நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், அதன் முடிவில் தங்களுக்குத் திருப்தி இல்லை என்றும் பாதிக்கப்பட்ட வரதராஜன் மற்றும் ஜெயசுதா தம்பதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, இந்தச் சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி, தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் லாரி, மினி ஆட்டோ மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமத்தி வேலூரில் காவலாளியைக் கட்டிப்போட்டு, சிமெண்ட் பைப் நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔