திருச்சி ரயில் நிலையத்தில் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் மேற்கொண்ட சிறப்பு சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பு ரோந்து பணி
திருச்சி இருப்புப்பாதை காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா, ஐ.பி.எஸ். உத்தரவின்பேரில் ரயில்களில் சிறப்பு ரோந்து மற்றும் சோதனைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, முதல் நிலைக் காவலர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர் விழுப்புரம் ரயில் நிலையம் முதல் திருச்சி வரை 12642-ம் எண் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
இருக்கைக்கு அடியில் கிடந்த சாக்குப்பை
திருச்சி ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடைக்கு ரயில் வந்தடைந்தபோது, அதன் பின்புற பொதுப்பெட்டியில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது இருக்கைக்கு அடியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த சாக்குப்பையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
எதிரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

