திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றி கழகம் மகத்தான வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள ஒவ்வொரு வழக்கும் வெவ்வேறானது என்றும், சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசுவதில் எந்த தவறும் இல்லை என்றும் கூறிய அவர், முதலமைச்சருக்கு பேசுவதற்கான அதிகாரமும் உரிமையும் உள்ளது என தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் பதிலுரை சட்டமன்ற வரலாற்றிலேயே முக்கியமான உரையாக அமைந்துள்ளதாக தான் சட்டமன்றத்தில் பேசியதாகவும் கூறினார்.
ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்
2029-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த தயக்கமும் இல்லை என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
“நான் பிறப்பால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன். எங்களுடைய ஒரே கருத்து ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதுதான். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் தேர்வு செய்யப்படுவார்” என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் தலைவர்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது வழக்கமானது என்றும், 140 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார்.
“போராட்டமும் தியாகமும் நிறைந்தவர் ராகுல் காந்தி”
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் மாணிக்கம் தாகூர் தயக்கம் காட்டுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், “காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் என்ற முறையில் பகிரங்கமாக அறிவிக்கிறேன். 2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்” என்றார்.
மேலும், உலக வரலாற்றில் ராகுல் காந்தியின் போராட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்றும், போராட்டமும் தியாகமும் நிறைந்த ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும் என்றும் கூறினார். அதற்காக தாங்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து தவறாக கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை முதலமைச்சர் விஜய் அறிவிக்கலாம் என்றும் தெரிவித்தார். அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்வி தற்போது தேவையில்லை என்றும் கூறினார்.
“இடதுசாரிகளும் கூட்டணியில் இணைவார்கள்”
தங்களது கூட்டணியில் இடதுசாரி கட்சிகளும் இணைவார்கள் என்ற நம்பிக்கையில் செயல்பட்டு வருவதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் விஜயின் இமேஜ் உச்சத்தில் இருக்கும் என்றும், நடைபெற உள்ள இடைத்தேர்தல்களிலும் தாங்களே வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு தொடர்பாக அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என்றும், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவோம் என்றும் கூறிய அமைச்சர் விஸ்வநாதன், “ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்” என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
பேட்டி: விஸ்வநாதன், அமைச்சர்

