விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட சேத்தூர் பேருந்து நிலையம் முன்பாக, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், கட்சித் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் மலர் மாலைகள் அணிவித்தும் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி நன்றி தெரிவித்துப் பேசினார். உரையை முடித்துக் கொண்டு அவர் புறப்படத் தயாரானபோது சலசலப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேல் நிலவி வரும் கடுமையான மின்வெட்டுப் பிரச்னையைச் சரிசெய்யக் கோரி, மனு அளிக்க அப்பகுதி மாற்று கட்சியினரும் பொதுமக்களும் வந்திருந்தனர். ஆனால், அமைச்சர் அந்த மனுவை வாங்காமல் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மாற்று கட்சியினர், கூட்டம் நடைபெற்ற இடத்திலேயே செய்தியாளர்களைச் சந்தித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி கொந்தளித்தனர். நிலைமை தீவிரமடைவதைக் கண்ட கூட்ட ஏற்பாட்டாளர்களான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், கூட்டத்தில் இருந்தவர்களை உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கூறி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், மனு கொடுக்க வந்த மாற்று கட்சியினர் மற்றும் பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் மனு வாங்க மறுக்கப்பட்ட விவகாரத்தால் சேத்தூர் பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
அரசியல்
அமைச்சர் ஜெகதீஸ்வரி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மாலை நடைபெற்றது.
🕒 11 செப்., 2026, 05:23 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதிக்குட்பட்ட சேத்தூர் பேருந்து நிலையம் முன்பாக, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், கட்சித் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் மலர் மாலைகள் அணிவித்தும் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.*
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
