அரியலூர் மாவட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி, இ.ஆ.ப., முன்னிலையில் தா.பொட்டக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆய்வு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 519 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 26,176 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் 218 அரசு பள்ளிகள், 17 அரசு உதவிபெறும் பள்ளிகள், பேரூராட்சி பகுதிகளில் 3 அரசு பள்ளிகள் மற்றும் 3 அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 241 பள்ளிகளைச் சேர்ந்த 18,161 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பள்ளிகளின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, காலை மற்றும் மதிய உணவு பெறும் மாணவர்களின் விவரங்கள், உணவின் அளவு மற்றும் தரம், உணவு வழங்கப்படும் நேரம், அன்றைய தினம் வழங்கப்பட்ட உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், மாணவர்களுக்கான உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடங்களையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். சமையல் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு, புதிய திட்டத்திற்காக வாங்கப்பட்ட கூடுதல் சமையல் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களின் தரம், புதிய எரிவாயு இணைப்புகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்ந்து தூய்மையாகவும், சுகாதாரமான முறையிலும், போதுமான அளவிலும் தயாரித்து வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு டாக்டர் சி. பழனி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க. சங்கமித்திரை, மகளிர் திட்ட இயக்குநர் சு. தேன்ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகோபால், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

