கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.31 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அணையின் நீர்மட்டம் மீண்டும் 80 அடியைக் கடந்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,833 கனஅடியாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் விரைவில் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் காவிரி டெல்டா மற்றும் மேட்டூர் அணையை நம்பியுள்ள பல்வேறு மாவட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

