விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான குடிநீர் வசதிகளை கோவில் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தலமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்காக வந்து செல்கின்றனர்.
சதுரகிரி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சதுரகிரி மலைப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் அங்குள்ள ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து குறைந்து பல இடங்கள் வறண்டு காணப்படுகின்றன. மேலும், தற்போது நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பக்தர்களுக்கு குடிநீர் தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க கோவில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
தற்போது சதுரகிரி கோவில் அடிவாரப் பகுதியில் குடிநீர் பாட்டில்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. திருவிழா நாட்களில் பக்தர்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அவை தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

