நைரோபி: கடுமையான வெப்பம் மற்றும் நீடித்த வறட்சி காரணமாக கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஒட்டகங்கள் அதிக அளவில் உயிரிழந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாலைவன சூழலிலும் வாழக்கூடிய ஒட்டகங்களே தற்போதைய பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
வடக்கு கென்யாவின் வறண்ட பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நீர்நிலைகள் வறண்டு போவதுடன் மேய்ச்சல் நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கால்நடைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் பல ஒட்டகங்கள் பலவீனமடைந்து உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இளம் ஒட்டகக் குட்டிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. தாய்ப்பாலின் உற்பத்தி குறைவதும், நீரிழப்பு அதிகரிப்பதும் அவற்றின் உயிரிழப்புக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சில பகுதிகளில் ஒட்டக உயிரிழப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், பருவநிலை மாற்றம் மனிதர்களை மட்டுமல்லாமல் கடுமையான சூழலுக்கு ஏற்றவாறு பரிணாம வளர்ச்சி பெற்ற விலங்குகளையும் பாதித்து வருவதை வெளிப்படுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். கால்நடை வளர்ப்பை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நீர் மேலாண்மை, வறட்சி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகுந்த திட்டங்கள் அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

