அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி பெலிசிட்டி, தனது தந்தை டேவிட் ரஷ் உடன் இணைந்து ஹூலா ஹூப் விளையாட்டில் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனைகளுக்காக அறியப்படும் டேவிட் ரஷ் சுழற்றி வீசும் ஹூலா ஹூப் வளையத்திற்குள், அவரது மகள் பெலிசிட்டி துல்லியமாக பாய்ந்து குதிக்கும் சாகசத்தில் ஈடுபட்டார்.
30 விநாடிகளில் 9 முறை
இந்த சவாலில், தந்தை சுழற்றி வீசும் வளையத்திற்குள் சிறுமி குறிப்பிட்ட நேரத்திற்குள் குதிக்க வேண்டும். தந்தை–மகள் கூட்டணி இந்த சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றியது.
இதற்கு முன்பு, இதே வகையான சவாலில் 30 விநாடிகளில் 8 முறை வளையத்திற்குள் குதித்ததே சாதனையாக இருந்தது. தற்போது பெலிசிட்டி தனது தந்தையுடன் இணைந்து 30 விநாடிகளில் 9 முறை வளையத்திற்குள் பாய்ந்து புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி
கின்னஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ சான்றிதழ்கள் தபால் மூலம் டேவிட் ரஷின் வீட்டிற்கு வந்துள்ளன. சான்றிதழ்கள் கிடைத்ததை குடும்பத்தினரிடம் உடனடியாக தெரிவிக்காமல், அனைவரையும் ஒன்றாக அழைத்து வைத்து பின்னர் சான்றிதழ்களை வழங்கி டேவிட் ரஷ் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
இறுதியாக 3 வயது பெலிசிட்டிக்கும் அவரது முதல் அதிகாரப்பூர்வ கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஒரே நாளில் 3 குழந்தைகளும் சாதனையாளர்கள்
டேவிட் ரஷின் மூத்த மகன்களான ஜெரமி மற்றும் பீட்டரும் ஏற்கெனவே தங்களது தந்தையுடன் இணைந்து வெவ்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளனர்.
தற்போது பெலிசிட்டியும் கின்னஸ் உலக சாதனை சான்றிதழை பெற்றதன் மூலம், டேவிட் ரஷின் மூன்று குழந்தைகளும் ஒரே நாளில் தங்களது முதல் அதிகாரப்பூர்வ உலக சாதனை சான்றிதழ்களை பெற்றுள்ளனர். இந்த குடும்பத்தின் சாதனை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

