தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருஷநாடு, மூல வைகை ஆறு மற்றும் குன்னூர் வைகை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீரின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆண்டிபட்டி வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றங்கரையோரப் பகுதி மக்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பைக் கருதி யாரும் ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் இறங்கி குளிக்கவோ வேண்டாம் என்றும், கால்நடைகளை ஆற்றில் இறக்கக் கூடாது என்றும் ஒலிபெருக்கி மூலம் தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

