நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நகர்ப்புற மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் சி.எஸ். திலீப் தெரிவித்தார்.
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் மதுபாலன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சி.எஸ். திலீப் ஆகியோர் இன்று புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைத்து, வளாகத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ சி.எஸ். திலீப், நாமக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மருத்துவமனைக் கட்டிடத்தைச் சீரமைத்து புதுப்பிக்க சுமார் ரூ.50 லட்சம் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சீரமைக்க வேண்டிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பணிகளுக்காக சிஎஸ்ஆர் (CSR) நிதியின் கீழ் யுனைடெட் வெல்பேர் டிரஸ்ட் அமைப்பு உதவ முன்வந்துள்ளது. இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும்போது, விபத்து, விஷம் அருந்துதல், நாய் கடி, பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சைகள் 24 மணி நேரமும் வழங்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகள் விரைவில் முழுவீச்சில் தொடங்கப்பட்டு, 45 முதல் 60 நாட்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாமக்கல் பொதுமக்களுக்குக் கூடுதல் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட நல அலுவலர் மருத்துவர் கே. பூங்கொடி, மாநகராட்சி ஆணையாளர் சண். செல்வ பாலாஜி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

