ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பன்னீர்செல்வம் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி விற்பனை தீவிரமடைந்துள்ளது. மணிக்கூண்டு, ஆர்.கே.வி. சாலை, திருவெங்கடம் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் டி.வி.எஸ். வீதி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கடைகள் மற்றும் தற்காலிக விற்பனை நிலையங்கள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை அப்பகுதி ஜவுளி வியாபாரிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

