தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு 'பசிபோக்கும் தளம் தென்பொதிகை டிரஸ்ட்' சார்பில் 950 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இலஞ்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்; தன்னார்வத் தொண்டர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் வடை, பாயசம், மினி அதிரசம் உள்ளிட்ட 16 வகையான உணவுப் பொருட்கள் பாக்கு மட்டைக் தட்டுகளில் பரிமாறப்பட்டன.
மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த உறவினர்கள் எனப் பலரும் வரிசையில் நின்று உணவு உட்கொண்டு மகிழ்ந்தனர். இந்த அறக்கட்டளை கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு அமாவாசை தினத்திலும், கடந்த 7 மாதங்களாக பௌர்ணமி தோறும் தென்காசி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு' என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் இந்த அறக்கட்டளை, மதுரை முதியோர் இல்லம், ஆரம்ப ஜோதி பள்ளி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அரிதாரமங்கலம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு காப்பகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்நநாளில் உணவு வழங்கியுள்ளது. பொதுமக்களின் நிதியுதவியுடன் செயல்படும் இவர்களின் சேவையை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

