திருப்பத்தூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் வார்டுகளுக்குள் தெருநாய்கள் மற்றும் குரங்குகள் சர்வ சாதாரணமாக உலா வருவதால், நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் நகரம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர். மேலும், ஏராளமானோர் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வார்டுகளுக்குள் நுழைந்து அங்கிருக்கும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் கொண்டுவரும் உணவுப் பொருட்களைக் குரங்குகள் பிடுங்கிச் செல்வது வாடிக்கையாகியுள்ளது.
நோயாளிகள் பாதுகாப்பான சூழலில் சிகிச்சை பெற வேண்டிய மருத்துவமனை வளாகத்திலேயே விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கவலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, மருத்துவமனைப் பகுதிக்குள் தெருநாய்கள் மற்றும் குரங்குகள் நுழைவதைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

