திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள சண்முகபுரம் பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் பசுமைப் பரப்பை விரிவுபடுத்துவதற்கும் வள்ளியூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அரசமரம், புங்கமரம், மகாகனி, பூவரசமரம், புளியமரம் உள்ளிட்ட 10 வகையான மரங்களைச் சேர்ந்த 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நடப்பட்ட மரக்கன்றுகள் முறையாக வளர்ந்து பயன்பெறும் வகையில், அவற்றுக்குச் சொட்டுநீர்ப் பாசன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மரக்கன்றுகளை வள்ளியூர் பேரூராட்சி பணியாளர்கள் தொடர்ந்து பராமரிக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், இதேபோன்று பிற பேரூராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளும் கலந்துகொண்டனர்.

