திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள கல்லுப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஓவரூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் செந்தில் முருகன் (44). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லுப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் அங்குள்ள பாதுகாவலர் தங்கும் அறையில் செந்தில் முருகன் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்ட சக ஊழியர்கள் மற்றும் அப்பகுதியினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரைத் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், செந்தில் முருகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த துவரங்குறிச்சி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் கைப்பற்றப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் துவரங்குறிச்சி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.









