மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள இராமையன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி விநாயகர், அருள்மிகு முத்துமாரியம்மன் மற்றும் அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 19ஆம் தேதி அன்று விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை வேத மந்திரங்கள் முழுங்க, சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
பின்னர், மேளதாளங்கள் முழங்க திருக்கோயில்களின் விமான கலசங்கள் மற்றும் மூலவர் சன்னதிகளில் புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன.
இவ்விழாவில் இராமையன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், த.வெ.க மதுரை வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா, வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழன் தாமு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இராமையன்பட்டி கிராம பொதுமக்களும், திருவள்ளுவர் தமிழ் மன்ற குழுவினரும் இணைந்து சிறப்பான முறையில் செய்திருந்தனர்.









