கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு வெங்கமேடு என்.எஸ்.கே. நகர் மயானத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் செல்போன் வெளிச்சத்தில் இறுதிச் சடங்குகளை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அப்பகுதி மக்கள் இதுவரை இப்பகுதிக்கு அருக e உள்ள மற்றொரு மயானத்தைப் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. தற்போது மீண்டும் இதே மயானத்தை மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், ஊடகங்களில் வெளியான செய்தியின் எதிரொலியாக மக்களின் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது அப்பகுதியில் மின்விளக்கு வசதி முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. துரிதமாக நடவடிக்கை எடுத்து மக்களின் சிரமத்தைப் போக்கிய மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.









