நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடியை கைது செய்ய முயன்ற காவலர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வீரவநல்லூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் தலைமைக் காவலர்கள் விஜய், திருமலைகுமாரசாமி ஆகியோர் வீரவநல்லூர் - புதூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதூர் ரயில்வே பாலம் அருகே, வீரவநல்லூர் களத்து மேட்டுத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பாடகலிங்கம் என்ற கொங்காணி (19), கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்று கொண்டிருந்தார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அவரிடம் இருந்த அரிவாளை கீழே போடுமாறு எச்சரித்தனர். ஆனால், ஆத்திரமடைந்த பாடகலிங்கம், பணியில் இருந்த தலைமைக் காவலர் விஜய்யை கீழே தள்ளிவிட்டு, அவரை வெட்டிக் கொன்றுவிடுவதாக அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பாடகலிங்கத்தை தீவிர தேடுதலுக்குப் பிறகு கைது செய்தனர். அவர் மீது ஆயுதத் தடைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.









