திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், எண்கண் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளதுடன், 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றன. இப்பகுதி வழியாகச் செல்லும் பிரதான சாலை, தஞ்சாவூர் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையையும், கும்பகோணம் – திருவாரூர் நெடுஞ்சாலையையும் இணைக்கும் மிக முக்கிய இணைப்பாக விளங்குகிறது.
இந்நிலையில், கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக இந்தச் சாலை முறையாகப் பராமரிக்கப்படாமல், ஆங்காங்கே குண்டும் குழியுமாக மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இச்சாலை வழியாகச் செல்லும் பள்ளி மாணவ-மாணவியர்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், அருகில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக குடவாசல் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், சேதமடைந்துள்ள எண்கண் பிரதான சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.









