ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயசாரதி (45). இவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலையில், இவர் ஈரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், விஜயசாரதி தான் பணியாற்றும் பள்ளியில் பயிலும் 13 வயதுடைய நான்கு மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் உடனடியாக இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், மாவட்ட குழந்தை நல அலுவலகத்திற்கும் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் குழந்தை நலக் குழுவினர் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் அளித்தப் புகாரின் பேரில் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார், ஆசிரியர் விஜயசாரதி மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த இச்சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.









