நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு கொலை வழக்குகள் தொடர்புடைய கைதி, வார்டு கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கீழ முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (27). இவர் மீது முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் நான்கு கொலை வழக்குகள் மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 10-ஆம் தேதி கஞ்சா விற்பனை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்படுவதற்கு 20 நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்திருந்த சங்கரலிங்கத்திற்கு, சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கைதிகள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களின் கவனத்தை மீறி கழிவறைக்குச் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தமடைந்த மருத்துவமனை ஊழியர்களும் காவலர்களும் உள்ளே சென்று பார்த்தபோது, அவர் ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலைய0கக் கண்டனர். உடனடியாக அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக் காயத்தின் வலி தாங்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

