கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் சாலைகளில் கழிவுநீருடன் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மாலை கரூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை வேளையில் வெங்கமேடு, வேலுச்சாமிபுரம், தாந்தோன்றிமலை, காந்திகிராமம், பசுபதிபாளையம், உப்பிடமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமானுஜர் நகர், வடக்கு பிரதட்சணம் சாலை, வேம்பு மாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மேலும், வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் கழிவுநீர் தேங்கிய சாலைகளைக் கடந்து செல்லும்போது, சில இருசக்கர வாகனங்கள் திடீரென பழுதடைந்து நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்குவதால், உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தி இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

