திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் கன்றாம் பள்ளி சூர்யா நகர் பகுதியில், புதிய வீடு ஒன்றில் புகுந்து பூட்டை உடைத்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளது குறித்து உமராபாத் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமல் சிங் (45). எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் இவர், மேல் கன்றாம் பள்ளி சூர்யா நகர் பகுதியில் புதிய வீடு கட்டி முடித்து, கிரகப்பிரவேசத்திற்கு தயாராகி வந்தார். இந்நிலையில், இன்று காலை அப்பகுதி மக்கள் கமல் சிங்கிற்கு தொலைபேசி வாயிலாக வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கமல் சிங் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு எல்.இ.டி. தொலைக்காட்சிகள், இரண்டு பித்தளை அண்டாக்கள் மற்றும் சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன ஒயர்கள் என மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், சுவிட்ச் பெட்டிகளும் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல் நிலையக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

