திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பி.கஸ்பா பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலரின் உத்தரவின்பேரில், ஆம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீ விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள், தீ விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் விபத்து நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், தீ விபத்து ஏற்படும் அவசரச் சூழ்நிலைகளில் எவ்வாறு பாதுகாப்பாகச் செயல்படுவது என்பது குறித்தும், தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைப்பது குறித்தும் தீயணைப்புத் துறையினர் நேரடி செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் சுகாதார நிலையப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.









