Settings

முகப்பு/நகரங்கள்/வாரந்தோறும் ரூ. 200 லஞ்சம் கேட்ட பெண் பொறுப்பாளர் - கொதித்தெழுந்த 100 நாள் வேலைப் பணியாளர்கள்!
நகரங்கள்

வாரந்தோறும் ரூ. 200 லஞ்சம் கேட்ட பெண் பொறுப்பாளர் - கொதித்தெழுந்த 100 நாள் வேலைப் பணியாளர்கள்!

🕒 24 அக்., 2026, 08:27 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வாரந்தோறும் ரூ. 200 லஞ்சம் கேட்ட பெண் பொறுப்பாளர் - கொதித்தெழுந்த 100 நாள் வேலைப் பணியாளர்கள்!
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் தாதனவலசையில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களிடம் லஞ்சம் கேட்ட பணித்தள பொறுப்பாளரை நீக்கக் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தைச் சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் தாதனவலசை பகுதியில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் பணித்தள பொறுப்பாளரை பணி நீக்கம் செய்யக் கோரி, பொதுமக்கள் அரசுப் பேருந்தைச் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாதனவலசை பகுதியில் 150-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக பணித்தள பொறுப்பாளராக தேவி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், பண்ணைக் குட்டை வெட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களிடம் வாரம் தோறும் ரூ. 200 லஞ்சம் வாங்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தொழிலாளர்கள் முறையிட்டதை அடுத்து, அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டு, தொழிலாளர்களிடம் தொடர்ந்து பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், பணியாளர்களை அவதூறாகப் பேசுவதுடன், கேள்வி எழுப்பும் நபர்களுக்கு வேலை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், தாதனவலசை பகுதியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் அரசுப் பேருந்தைச் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவசரப் பணிகளுக்காகச் செல்லும் பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராமியக் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். அதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகளைப் பணியாளர்கள் முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பினர்.

சம்பந்தப்பட்ட பணித்தள பொறுப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, சிறைபிடிக்கப்பட்ட அரசுப் பேருந்தும் விடுவிக்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔