மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கதண்டு வண்டுகள் தாக்கியதில் பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட வள்ளுவக்குடி, ஆதமங்கலம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வழக்கம்போல் சீர்காழி கோயில்பத்து பகுதியில் உள்ள பள்ளிக்கும், பல்வேறு பணிகளுக்காகவும் இருசக்கர வாகனங்களிலும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஊமமதகு பகுதியில் உள்ள புளியமரத்தில் இருந்த கதண்டு வண்டுகளின் கூடு எதிர்பாராதவிதமாக கலைந்தது. இதனால் ஆத்திரமடைந்த கதண்டு வண்டுகள் அவ்வழியாகச் சென்றவர்கள் மீது திடீரெனப் பாய்ந்து கொட்டின.
இந்தத் தாக்குதலில் கடுமையான வலி மற்றும் ஒவ்வாமையால் அவதிப்பட்ட ஆதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் ஆதேஷ் (13), வள்ளுவக்குடி பகுதியைச் சேர்ந்த தரனேஷ் (12), 10ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீஹரி (15), மேலும் பாலகுமார் (44), கலையரசன் (48) உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.




