புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ ராஜவீதி மற்றும் வடக்கு ராஜவீதி பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதிப்பது குறித்தும், போக்குவரத்து மாற்றங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கக் கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
உலக மனித உரிமைகள் கழகத்தைச் சேர்ந்த குமரேசன் உள்ளிட்டோர் இந்த மனுவை அளித்தனர். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதுக்கோட்டை நகரில் தீபாவளி பண்டிகை காலங்களில் கீழ ராஜவீதி மற்றும் வடக்கு ராஜவீதி ஆகிய பகுதிகளில் வழக்கமான கடைகளுடன், தற்காலிக மற்றும் தரைக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வழக்கமான ஒன்றாகும். இந்தச் சமயங்களில் இப்பகுதியில் இயக்கப்படும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவது வழக்கம்.
எனினும், தற்போது இந்த இரண்டு வீதிகளையும் சுற்றியுள்ள பல பகுதிகளில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு வருவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தரைக்கடை வியாபாரிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், கனரக வாகனங்களை மட்டும் மாற்றுப் பாதையில் திருப்பி விட வேண்டும் என்றும், இருசக்கர வாகனங்கள் அப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.









