12-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு கைத்தறி கண்காட்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் (SADP) திட்ட இயக்குநர் சங்கீதா முன்னிலையில் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 20 நெசவாளர்களுக்கு மொத்தம் ரூ.11.57 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா வழங்கினார். அரசு சார்பில் வழங்கப்பட்ட இந்த உதவிகள், கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் பல்வேறு வகையான கைத்தறி ஆடைகள், பாரம்பரிய நெசவுப் பொருட்கள் மற்றும் உள்ளூர் நெசவாளர்கள் தயாரித்த சிறப்பு தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்கள் கைத்தறி பொருட்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

