சென்னை: வேளாண்மை சார்ந்த தொழில்களை தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் புதிய தொழில்முனைவோருக்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. Agri-Entrepreneurship Scheme எனப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் புதிய வேளாண் தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மூலதன மானியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், வேளாண் பொருட்களின் மதிப்புக் கூட்டல், பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் உள்ளிட்ட தொழில்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரூ.5 லட்சம் வரை திட்டச் செலவு
இந்தத் திட்டத்தின் கீழ் புதிய தொழில்முனைவோருக்கான அதிகபட்ச திட்டச் செலவு ரூ.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் திட்டச் செலவில் 40 சதவீதம், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.
தொழில்முனைவோர் குறைந்தபட்சம் 20 சதவீத தொகையை சொந்த பங்களிப்பாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை வங்கிக் கடன் மூலம் பெற முடியும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Degree, Diploma, ITI அல்லது Vocational Training முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வேளாண் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தொழில் புதிதாக தொடங்கப்பட வேண்டும். ஏற்கனவே வணிக நடவடிக்கைகள் தொடங்கி முதல் Commercial Invoice உருவாக்கப்பட்டிருந்தால், புதிய தொழில்முனைவோருக்கான இந்தத் திட்டத்தில் தகுதி இருக்காது.
தனி உரிமையாளர், Partnership அல்லது Private Limited Company போன்ற நிறுவன அமைப்புகளில் தொழில் தொடங்கலாம்.
எந்த தொழில்களுக்கு முன்னுரிமை?
வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டுதல், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல், முதன்மை பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் போன்ற தொழில்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்கள், ஆற்றல் சேமிப்பை ஊக்குவிக்கும் முயற்சிகள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்.
முக்கிய தகுதி நிபந்தனைகள்
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் சில முக்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
- தொழில் TNIAMP திட்டத்தின் கீழ் வரும் குறிப்பிட்ட பகுதிகளில் அமைந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் எந்த வங்கியிலும் கடன் தவறுதலாளராக இருக்கக் கூடாது.
- ஏற்கனவே அதே உள்கட்டமைப்புக்கு மற்ற அரசு மானியத் திட்டங்களில் உதவி பெற்றிருக்கக் கூடாது.
- சுயநிதியில் மட்டுமே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படாது.
- நிலம் வாங்குவதற்கான செலவு திட்டச் செலவில் சேர்க்கப்படாது.
- புதிய இயந்திரங்களுக்கு உதவி வழங்கப்படும்; சில நிபந்தனைகளுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாம் நிலை இயந்திரங்களும் அனுமதிக்கப்படலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
திட்டத்தில் சேர விரும்புபவர்கள் முதலில் தங்களது மாவட்டத்தில் நடைபெறும் Facilitation Workshop-ல் பங்கேற்க வேண்டும்.
அதன்பிறகு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி வழங்கப்படும். NIFTEM, TNAU உள்ளிட்ட நிறுவனங்கள் அல்லது Incubators உதவியுடன் இந்தப் பயிற்சி நடைபெறலாம்.
பயிற்சிக்குப் பிறகு, Agri Business Specialist உதவியுடன் Business Plan தயாரிக்கப்படும். இந்தத் திட்ட அறிக்கை உரிய அதிகாரிகள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, பின்னர் வங்கிக்கு அனுப்பப்பட்டு கடன் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வங்கி கடன் அனுமதி கிடைத்த பிறகு, தொழில் தொடங்குவதற்கான செயல்முறைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மானியம் Back-ended Subsidy முறையில் வங்கிக் கணக்கில் சரிசெய்யப்படும்.
எங்கு தொடர்பு கொள்ள வேண்டும்?
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் (Deputy Director of Agriculture – Agri Business) அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் மற்றும் திட்ட விவரங்களை தமிழக வேளாண் வணிகத் துறையின் இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
வேளாண் சார்ந்த தொழில் தொடங்க திட்டமிடும் இளைஞர்கள், தொழில் தொடங்குவதற்கு முன் தங்களது மாவட்ட அலுவலகத்தில் திட்டத்தின் தற்போதைய தகுதி மற்றும் நடைமுறைகளை உறுதி செய்து கொள்வது அவசியம்.

