திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா இளம் நெல் பயிர்கள், தொடர் கனமழை காரணமாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த தொடர் மழையால் வயல்வெளிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. குறிப்பாக, கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பாரதி, மூலங்குடி, நிமிழச்சேரி, வெங்காரம், பேரையூர், புனவாசல் மற்றும் நொச்சிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாத கால சம்பா இளம் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இதனால் பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உழவுப் பணி, விதை நெல், களைக்கொல்லி, உரம் மற்றும் பூச்சி மருந்து என ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளதாகவும், பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
