திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக, வடபாதிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாராக 1,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த இளம் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கிளியனூர், புணவாசல், மாயனூர், சோமாச்சி மற்றும் வடபாதிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதி சரியில்லாத காரணத்தினால் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வயல்களில் பயிரிடப்பட்டிருந்த இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பேரிழப்பைச் சந்தித்துள்ள இப்பகுதி விவசாயிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாகச் சென்று சேதமடைந்த பயிர்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், துரித அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

