நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரி நீர் உரிய நேரத்தில் கிடைக்காமல் குருவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பருத்தி சாகுபடியிலும் கடுமையான மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் சுமார் 2,370 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் திருமருகல் பகுதியில் மட்டும் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் 'சப்பாத்திப் பூச்சு' தாக்குதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தண்டாளம், கட்டுமாவடி, துண்டம், அந்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் பருத்திப் பஞ்சுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
இந்தப் பூச்சித் தாக்குதல் காரணமாக, வழக்கமாக ஏக்கருக்கு 6 குவிண்டால் வரை கிடைக்க வேண்டிய பருத்தி மகசூல் தற்போது பாதியாகக் குறைந்து 3 குவிண்டாலாகச் சரிந்துள்ளது. இதனால் சாகுபடிக்காகச் செய்த முதலீட்டைக் கூட எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே குருவை சாகுபடி இழப்பைச் சந்தித்துள்ள தங்களுக்கு, பருத்தியிலும் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பிற்காக வேளாண்துறை அதிகாரிகள் வயல்களை நேரில் ஆய்வு செய்து, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

