தமிழகம் முழுவதும் வார இறுதிக்காக 2,120 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 14 முதல் 16 ஆம் தேதி வரை வழக்கமான பேருந்து சேவைகளுடன் இணைந்து இந்தக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு வழித்தடங்களில் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களிலும் நாள் ஒன்றுக்கு தலா 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மேலும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்குத் தினமும் தலா 80 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி விடுமுறை நிறைவடைந்து பயணிகள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூருவிற்குத் திரும்புவதற்கு வசதியாக, ஆகஸ்ட் 16 அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிட்டு, முன்பதிவு செய்து கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

