வ.உ.சி. சிதம்பரனாரின் 90-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி டவுனில் உள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் காரில் மணிமண்டபத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது, மணிமண்டபத்தின் வாசல் பகுதியில் சாலையை மறித்து அந்த இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இளைஞர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் முயன்ற போலீசார், கூட்டத்தைக் கலைக்க லேசான தடியடி நடத்தினர். ஆரம்ப விசாரணையில், குறிப்பிட்ட சில இளைஞர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதன்காரணமாகவே அவர்கள் அங்கு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வ.உ.சி. நினைவு தின நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









