நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு மதுரபாஷினி உடனுரை ஸ்ரீ தேவபுரீஸ்வரர் சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கோலாகலமாகத் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக கடந்த 16ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி, தேரடி சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து பெண்கள் ஊர்வலமாக சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்தனர். தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வும், மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றன. பின்னர், மேள தாளங்கள் முழங்க சுவாமி ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, சன்னதி முன்பாக மலர் அலங்காரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, மாலை மாற்றுதல், வஸ்திரம் சாத்துதல் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றன. மங்கள வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் ஒலிக்க, ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி வள்ளி மற்றும் தேவசேனாவுக்குத் திருமாங்கல்யம் அணிவித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.









