மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள 66.எம். உசிலம்பட்டி கிராமத்தில், ஸ்ரீ அக்னிவீரன் மற்றும் வீரன்கருப்பன்சாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், புண்ணியாக வாசனம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் மஹாபூர்ணாகுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து, காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை அக்னிவீரன் சுவாமி பங்காளிகள் மற்றும் 66.எம். உசிலம்பட்டி கிராம பொதுமக்கள் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர்.









