பழனி: பழனி அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவுநாளை முன்னிட்டு, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுடன் தொடங்கியது. ஒருவார காலம் நடைபெற்ற இந்த விழாவில், நாள்தோறும் மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ஆறாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அடிவாரம் கிரிவீதியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நிறைவுநாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை மாலை மலைக்கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கும், இரவு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மணமேடையில், தம்பதி சமேதராக முத்துக்குமாரசாமி எழுந்தருளினார். தொடர்ந்து, பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தைத் தொடர்ந்து, சுவாமிக்கு பட்டாடைகள் உடுத்தப்பட்டு, நறுமண மலர்கள் மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மங்கலநாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நிறைவுபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மங்கலப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.









