மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாயூரநாதர் கோயிலில், கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்குகளால் சிறப்பு அபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் உள்ள பெரியகோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மாயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்து, தனது சாப விமோசனம் அடைந்ததாக புராண வரலாறு கூறுகிறது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இவ்வாலயத்தில் கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமையை (சோமவாரம்) முன்னிட்டு சிறப்பு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியையொட்டி, புனித நீர் அடங்கிய கடங்கள் மற்றும் 1008 சங்குகளில் புனித நீர் ஊற்றி சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. இதில் பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு மகா பூரணாகுதியும், அதனைத் தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்து ஸ்ரீ மாயூரநாதருக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், 1008 சங்குகளில் உள்ள புனித நீரைக் கொண்டு சுவாமிக்கு மகா அபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சங்காபிஷேகத்தைக் கண்டு பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.









