நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிங்காரவேலவர் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு தங்க குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் அம்பு போடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு இக்கோயிலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, துர்க்கை, மீனாட்சி, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு திருவுருவ அலங்காரங்களுடன் தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் நாளான விஜயதசமியை ஒட்டி, சிங்காரவேலவர் தங்க குதிரை வாகனத்தில் போர் வீரர் போன்ற தோற்றத்தில் வீதி உலா வந்தார். அப்போது, தேரடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட வில் மற்றும் அம்பை எடுத்து, தீய சக்திகளை ஒழிக்கும் ஐதீகத்தின்படி எட்டு திசைகளிலும் எய்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்கள் அம்பை போட்டிப் போட்டுப் பிடித்தனர்.
இதேபோன்று, ஸ்ரீ கோலவாமனப் பெருமாள் கோயிலிலும் எட்டு திசைகளிலும் அம்பு எய்தும் நிகழ்ச்சி ஒரே நேரத்தில் நடைபெற்றது. இதில் சிக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

