உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் செல்போன்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை தொடர்பாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவிலின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாக்கும் வகையிலும், பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்தி புகைப்படம், வீடியோ மற்றும் செல்ஃபி எடுப்பது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதும் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
செல்போன்களை கோவிலுக்கு வெளியே பாதுகாப்பாக வைத்துச் செல்வதற்காக மொத்தம் 5 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு ராஜகோபுரம் அருகே 2 மையங்களும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகே 2 மையங்களும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகே ஒரு மையமும் செயல்படும்.
இந்த பாதுகாப்பு மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைக்கலாம். அதன்பின்னர் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். தரிசனம் முடிந்து வெளியே வரும்போது டோக்கனை காண்பித்து செல்போனை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
செல்போன் தடையை மீறி யாரேனும் அதை மறைத்து கோவிலுக்குள் கொண்டு சென்றால், அந்த செல்போன் பறிமுதல் செய்யப்படுவதுடன், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
எனவே, செப்டம்பர் 1-ம் தேதி முதல் அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் செல்போனை எடுத்துச் செல்வதை தவிர்த்து, கோவில் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு மையங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

