மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தின் 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 7-ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.
சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் பீடாதிபதியாக 1971 முதல் 2019 வரை 48 ஆண்டுகள் பணியாற்றியவர் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள். சைவ சமயத்தையும் தமிழையும் வளர்ப்பதில் பெரும் பங்காற்றிய இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி பரிபூரணமடைந்தார். இவரது திருமேனி ஆதீன வளாகத்தில் உள்ள ஸ்ரீஆனந்தபரவசர் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு குருமூர்த்தம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது 7-ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், குருமூர்த்தத்திற்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகளைச் செய்து வழிபாடு நடத்தினார். இந்நிகழ்வில் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ சபாபதி தம்பிரான் சுவாமிகள், ஆதீன கட்டளை தம்பிரான்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.









