இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திண்டுக்கல்லிலும் விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் கோபாலசமுத்திரக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ நன்மை தரும் 108 விநாயகர் திருக்கோயில் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இக்கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகக் கூறப்படும் 32 அடி உயர மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் சிலை அமைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (14.09.2026) மஞ்சள், சந்தனம், பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதுடன், கோயில் வளாகத்தில் உள்ள 108 விநாயகர் சிலைகளுக்கும் அலங்காரம் செய்யப்பட்டது.
கோயில் முழுவதும் சுமார் 5 டன் வண்ண மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மலர் அலங்காரம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.
விநாயகரை தரிசிக்க வந்த பக்தர்கள், மலர் அலங்காரத்தை ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.
விழாவையொட்டி கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

